Super User Written by  Oct 27, 2016 - 51819 Views

மாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள்

சிங்கள காவல்துறையினரால் யாழ். பல்கலைக்கழக மாண வர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட‌ விவகாரம், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சூடுபிடித்ததுடன், தான் தயாராக வரவில்லை என்று ஆரம்பத்தில் தெரிவித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க, பதில் கேள்வியைக் கேட்டபோது, தனது ஆசனத்திலிருந்து எழுந்து நடந்து, நழுவிச்சென்றுவிட்டார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 11.45க்கு ஆரம்பமானது. இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு அமைச்சர்களான கயந்த கருணாதிலக, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சவை முடிவுகளை அறிவித்ததன் பின்னர், கேள்வி நேரம் ஆரம்பமானது. கேள்விநேரத்தின் போது, யாழ்ப்பாணத்தில், துப்பாக்கிச்சூட்டில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் தொடர்பிலும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைககள் குறித்து, உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவ இடத்துக்கு பொலிஸ் அதிகாரிகள் சென்றிருக்கவேண்டிய நிலையில், கடமையிலிருந்த சாதாரண பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்தும், ஊடகவியலாளர்கள் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தனர்.

அந்தச் சம்பவம் தொடர்பில், தற்போது எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமைகளை தெளிவுபடுத்திய அமைச்சர் சாகல ரத்நாயக்க, ஒரு சந்தர்ப்பத்தில், இந்த விவகாரம் தொடர்பில் தான், பூரண தெளிவின்றியே இவ்விடத்துக்கு வந்துவிட்டதாகவும் கூறிவிட்டார். எனினும், ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்விகளைக் கேட்டுத் துருவியெடுத்துவிட்டனர்.

நிலைமைகளைச் சமாளிப்பதற்காக மூன்று கேள்விகளுக்கு மட்டுமே இடமளிக்கப்படும் என்று, அமைச்சர் சாகல கூறியிருந்த போதிலும், ஊடகவியலாளர்கள் விடுவதாய் இல்லை.

கேள்வி நேரத்துக்கு முன்னதாக, சம்பவத்தை தெளிவுபடுத்திக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க,
யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில், கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக, பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயரிழக்கக் காரணமாக இருந்த சம்பவத்தை அடுத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டுமல்லாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், யாழ்ப்பாண சிவில் சமூகம், எம்.பி.க்கள் பலர், பொதுமக்கள் எனப் பலரும், நிலைமையை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு பெரிதும் ஒத்துழைத்து செயற்பட்டிருந்தனர்.

“அதற்கான சகல தரப்பினருக்கு நன்றியை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அவ்வாறு இல்லாத பட்சத்தில், பெரும் குழப்பமான நிலைமையொன்று ஏற்பட்டிருக்கக்கூடும்” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவினர், மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்திவரும் நிலையில், அந்தக் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பொலிஸார், அங்கு உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற அன்றும், இவ்வாறானதொரு உஷார் நிலையிலேயே பொலிஸார் இருந்தனர். அப்போது, வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு, பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். இரண்டு தடவைகள் சமிக்ஞை செய்துள்ளனர். அவ்விருதடவைகளையும் மீறி, மேற்படி மாணவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றதையடுத்தே, பொலிஸாரினால் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து அறியமுடிந்துள்ளது என்று விளக்கமளித்தார்.

குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள், இந்தச் சம்பவம் தொடர்பிலான உங்களது அர்த்தப்படுத்தலுக்கு அமைய, அது எந்த வகையில் இன ஒற்றுமைக்குப் பாதிப்பதாக அமைந்திருக்கக்கூடும் என்று அமைச்சரிடம் வினவினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சாகல, பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் இரு தமிழ் மாணவர்களின் உயிரிழப்பு என்பவற்றை, சம்பவத்தின் பாரதூரமான விடயங்களாக சுட்டிக்காட்டியதுடன், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி, சிலர் தூண்டுதல்களில் ஈடுபடுவதற்குக் காத்திருந்திருக்கலாம் என்றார்.

எவ்வாறிருப்பினும், யாழ். குடாநாட்டில் குற்றங்களில் ஈடுபடும் மோட்டார் சைக்கிள் குழுவினர், இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் சம்பந்தப்பட்டவர்களாகவே இருப்பதாக தமிழ் மக்களால் தெரிவிக்கப்படுகிறதே என்றும் வினவினர்.
இக்கேள்விக்கு எவ்விதமான பதிலையும் அளிக்காமல், ஆசனத்திலிருந்து எழுந்து கதவை நோக்கி நடந்தார் அமைச்சர். எனினும், கேள்வி கேட்ட ஊடகவியலாளர் விடவில்லை.

“நீங்கள் அமைதியாகச் செல்வதை, நான் ஆம் என்ற பதிலாக எடுத்துக் கொள்ளலாமா?” என மீண்டும் வினவினார், கேள்வியை எழுப்பிய அந்த ஊடகவியலாளர். அப்போது கதவுக்கு அருகில் சென்றுவிட்ட அமைச்சர் சாகல, “இல்லை, நான் எதுவும் சொல்லவில்லை” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

எனினும், கோப் குழு தொடர்பில், ஊடகவியலாளர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கும் இடையில், அதற்கு பின்னர் கடும் வாக்குவாதங்களும் தெளிவுபடுத்தல்களும் இடம்பெற்றன.

ஒரு கணத்தில் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுஜீவ, மருமகன் தவறிழைத்திருக்கின்றார் என்பதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் தவறிழைத்தார் என்று அர்த்தப்படாது. அதேபோல, முன்னாள் ஜனாதிபதியின் உறவினர் தவறிழைத்தார் என்பதற்கான முன்னாள் ஜனாதிபதி தவறிழைத்துள்ளார் என்று அர்த்தப்படாது என்று சுட்டிக்காட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…