யாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் இன்று ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவரகள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர், மாவீரர்களை நினைவுகூர்ந்து மெழுகுதிரிகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

தாயக விடுதலைப்போரில் ஆகுதியாகிய மாவீரர்களை வழமையாக நவம்பர் மாதம் 27 ஆம் தேதியே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அனுட்டித்து வந்துள்ளது.


இந்த மாவீரர் தினத்தை அனுட்டிப்பது சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்து, முந்தைய அரசாங்கம் அதற்குத் தடைவிதித்திருந்தது.


இந்த நிலையில் நேற்றிரவு யாழ் பல்கலைக்கழகத்தின் பல இடங்களிலும் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு அமைதியான முறையில் நடந்தேறியிருக்கின்றது.


மாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை

கடந்த 20ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக முன்றாம் வருட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது மாணவர்கள் மத்தியில் பல எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. இந்த படுகொலைகள் தொடர்பில் மாணவர்கள் ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கூடாக மட்டுமே தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இவ்வாறு யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட ஆசிரியர் விஜயகுமார் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை யாழ் பல்கலையில் நடைபெற்ற விசேட பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த படுகொலை சம்பவத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளார். மற்றைய மாணவனின் மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. ஆயினும் மாணவர்கள் அதை கொலை என்றே நம்புகின்றனர். ஏனெனில் தூப்பாக்கிப் பிரயோகத்திற்கு பின்னர் நடைபெற்ற செயற்பாடுகள் மேலும் சந்தேகங்களை கிளப்பியுள்ளன.

இவ்விரு மாணவர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் பொழுது விபத்து நடந்ததாகவே பொலிஸார் தெரிவித்தனர். எனவே, தூப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்ட தடயங்களை அழிப்பதற்காகவே இரண்டாவது மாணவன் கொலை செய்யப்பட்டிருக்கலாமென மாணவர்கள் கருதுகின்றனர்.

மேலும், பொலிஸார் மருத்துவ அறிக்கை வந்ததன் பின்னரே இறந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து இச்சம்பவம் தொடர்பாக வருந்துவதாகவும் மாணவர்களின் இறுதிச் சடங்கிற்குரிய செலவினை தாம் முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தனர். பல்கலை மாணவர்கள் தமது நண்பர்களை இழந்திருந்தாலும் மிகவும் நிதானமான முறையில் ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

அந்தவகையில், யாழ் மாவாட்ட செயலக முற்றுகை, பல்கலைக்கழக செயற்பாடுகள் முடக்கம் ஆகியன அமைந்திருந்தன எனவு சிரெஷ்ட ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உரிய விசாரணை கோரி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

மாணவர்களால் முன்னெடுத்துவரும் போராட்டத்தினை அடுத்து பல்கலை நிர்வாகத்தி னருடனும் மாணவ பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்துவதற்காக அமைச்சர் சுவாமிநாதன் தற்போது யாழ் பல்கலை க்கழகத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் சுவாமிநாதனுடனான சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்கு உள்ளே ஊடகவி யலாளர்கள் சென்ற சமயம் அவர்களை மாணவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்ததனால் அவர்கள் அனைவரும் அவ்விடத்திலிருந்து வெளியேறி சென்றுவிட்டனர்.

இதேவேளை யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மாணவர்களால்முடக்கப்பட்டுள்ளமையினால் ஊழியர்களை பல்கலை க்கழகத்திற்குள் அனுமதிக்க மாணவர்கள் மறுத்து வருகின்றனர்.

இதனால் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் போராசிரியர் வசந்திஅரசரட்ணம், மற்றும் பீடாதிபதிகள் பல்கலைக்கழக த்திற்கு உட்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தம்மை உள்ளேவிடுமாறு மாணவர்களை துணைவேந்தர் கேட்டவேளை அதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் இருபகுதியினருக்குமிடையே வாக்குவாதம் இடம்பெற்றது. அத்துடன் மாணவர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக போராட்ட ங்களை நடத்தினால் அனைவரதும் எதிர்காலம் வீணாவதுடன் பல்கலைக்கழகத்தையும் மூடவேண்டிய நிலையும் ஏற்படலா மெனவும் துணைவேந்தர் தெரிவித்தார்.இந்த சம்பவங்களை பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீடியோ கம ராவினை பறிக்க முற்பட்டுள்ளார் துணைவேந்தர்.அத்துடன் துணைவேந்தருடன் வேட்டியுடன் நின்ற விரிவுரையாளர் என கருத ப்படும் ஒருவர் ஊடகவியலாளர்களை நோக்கி சரமாரியாக சிங்களமொழியில் ஏசினார்.

மாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம்.

சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் இருவரது விசாரணையினை நியாயமாக நடத்தக்கோரி பல்கலைக்கழக மாணவர்களால் வடமா காண ஆளுநருக்கூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மஜரினை தான் ஜனாதிபதிக்கு அனுப்பியதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அதன் பிரதியை ஆளுநர் றெஜினோல்ட் கூரே பல்கலைக்கழக கலைப்பீட மாணவ ஒன்றிய தலைவருக்கு சிங்களத்தில் முன்னர் அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால் இந்த சிங்கள மொழியிலான அறிக்கையினை மாணவர் ஒன்றியம் நிராகரித்த நிலையில் இன்றையதினம் தமிழில் அந்த அறிக்கையினை அனுப்பி வைத்துள்ளதாக கலைப்பீட மாணவ ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்

சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்..

மேற்படி சம்பவத்தைக் கண்டித்தும், அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த போராட்டம் இன்று பொது மக்களாலும், சிவில் அமைப்பினராலும் தோட்டத்தின் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து, உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எமது உணர்வுபூர்வமான அஞ்சலிகள், அப்பாவி மக்களை துன்புறுத்தும் பொலிஸாரின் அடாவடி தனத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும், அஞ்சலிக்காக மெழுகுவர்த்தியை வைத்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள்

சிங்கள காவல்துறையினரால் யாழ். பல்கலைக்கழக மாண வர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட‌ விவகாரம், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சூடுபிடித்ததுடன், தான் தயாராக வரவில்லை என்று ஆரம்பத்தில் தெரிவித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க, பதில் கேள்வியைக் கேட்டபோது, தனது ஆசனத்திலிருந்து எழுந்து நடந்து, நழுவிச்சென்றுவிட்டார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 11.45க்கு ஆரம்பமானது. இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு அமைச்சர்களான கயந்த கருணாதிலக, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சவை முடிவுகளை அறிவித்ததன் பின்னர், கேள்வி நேரம் ஆரம்பமானது. கேள்விநேரத்தின் போது, யாழ்ப்பாணத்தில், துப்பாக்கிச்சூட்டில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் தொடர்பிலும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைககள் குறித்து, உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவ இடத்துக்கு பொலிஸ் அதிகாரிகள் சென்றிருக்கவேண்டிய நிலையில், கடமையிலிருந்த சாதாரண பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்தும், ஊடகவியலாளர்கள் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தனர்.

அந்தச் சம்பவம் தொடர்பில், தற்போது எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமைகளை தெளிவுபடுத்திய அமைச்சர் சாகல ரத்நாயக்க, ஒரு சந்தர்ப்பத்தில், இந்த விவகாரம் தொடர்பில் தான், பூரண தெளிவின்றியே இவ்விடத்துக்கு வந்துவிட்டதாகவும் கூறிவிட்டார். எனினும், ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்விகளைக் கேட்டுத் துருவியெடுத்துவிட்டனர்.

நிலைமைகளைச் சமாளிப்பதற்காக மூன்று கேள்விகளுக்கு மட்டுமே இடமளிக்கப்படும் என்று, அமைச்சர் சாகல கூறியிருந்த போதிலும், ஊடகவியலாளர்கள் விடுவதாய் இல்லை.

கேள்வி நேரத்துக்கு முன்னதாக, சம்பவத்தை தெளிவுபடுத்திக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க,
யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில், கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக, பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயரிழக்கக் காரணமாக இருந்த சம்பவத்தை அடுத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டுமல்லாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், யாழ்ப்பாண சிவில் சமூகம், எம்.பி.க்கள் பலர், பொதுமக்கள் எனப் பலரும், நிலைமையை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு பெரிதும் ஒத்துழைத்து செயற்பட்டிருந்தனர்.

“அதற்கான சகல தரப்பினருக்கு நன்றியை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அவ்வாறு இல்லாத பட்சத்தில், பெரும் குழப்பமான நிலைமையொன்று ஏற்பட்டிருக்கக்கூடும்” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவினர், மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்திவரும் நிலையில், அந்தக் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பொலிஸார், அங்கு உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற அன்றும், இவ்வாறானதொரு உஷார் நிலையிலேயே பொலிஸார் இருந்தனர். அப்போது, வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு, பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். இரண்டு தடவைகள் சமிக்ஞை செய்துள்ளனர். அவ்விருதடவைகளையும் மீறி, மேற்படி மாணவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றதையடுத்தே, பொலிஸாரினால் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து அறியமுடிந்துள்ளது என்று விளக்கமளித்தார்.

குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள், இந்தச் சம்பவம் தொடர்பிலான உங்களது அர்த்தப்படுத்தலுக்கு அமைய, அது எந்த வகையில் இன ஒற்றுமைக்குப் பாதிப்பதாக அமைந்திருக்கக்கூடும் என்று அமைச்சரிடம் வினவினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சாகல, பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் இரு தமிழ் மாணவர்களின் உயிரிழப்பு என்பவற்றை, சம்பவத்தின் பாரதூரமான விடயங்களாக சுட்டிக்காட்டியதுடன், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி, சிலர் தூண்டுதல்களில் ஈடுபடுவதற்குக் காத்திருந்திருக்கலாம் என்றார்.

எவ்வாறிருப்பினும், யாழ். குடாநாட்டில் குற்றங்களில் ஈடுபடும் மோட்டார் சைக்கிள் குழுவினர், இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் சம்பந்தப்பட்டவர்களாகவே இருப்பதாக தமிழ் மக்களால் தெரிவிக்கப்படுகிறதே என்றும் வினவினர்.
இக்கேள்விக்கு எவ்விதமான பதிலையும் அளிக்காமல், ஆசனத்திலிருந்து எழுந்து கதவை நோக்கி நடந்தார் அமைச்சர். எனினும், கேள்வி கேட்ட ஊடகவியலாளர் விடவில்லை.

“நீங்கள் அமைதியாகச் செல்வதை, நான் ஆம் என்ற பதிலாக எடுத்துக் கொள்ளலாமா?” என மீண்டும் வினவினார், கேள்வியை எழுப்பிய அந்த ஊடகவியலாளர். அப்போது கதவுக்கு அருகில் சென்றுவிட்ட அமைச்சர் சாகல, “இல்லை, நான் எதுவும் சொல்லவில்லை” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

எனினும், கோப் குழு தொடர்பில், ஊடகவியலாளர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கும் இடையில், அதற்கு பின்னர் கடும் வாக்குவாதங்களும் தெளிவுபடுத்தல்களும் இடம்பெற்றன.

ஒரு கணத்தில் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுஜீவ, மருமகன் தவறிழைத்திருக்கின்றார் என்பதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் தவறிழைத்தார் என்று அர்த்தப்படாது. அதேபோல, முன்னாள் ஜனாதிபதியின் உறவினர் தவறிழைத்தார் என்பதற்கான முன்னாள் ஜனாதிபதி தவறிழைத்துள்ளார் என்று அர்த்தப்படாது என்று சுட்டிக்காட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு; மக்கள் அச்சத்தில்

ஆயுதம் தாங்கிய விசேட சிங்கள அதிரடிப்படையினரால் யாழ் குடா நாடு முற்றுகைக்கு உள்ளாக்கப்படுகின்றது,. பல்கலைக்கழக மாணவர்கள் சிங்களப்பொலிசாரின் துப்பாக்கி சுட்டிற்கு பலியான சம்பவத்தை காரமம் காட்டி இந்த படைக்குவிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மாவட்டத்தில் சாதாரண காவல்துறையினர் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். நகரப் பகுதி மற்றும் நகருக்கு வெளியேயும் விசேட அதிரடிப் படையினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவகின்றனர்.

அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பொது மக்கள் - பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட முறுகலை அடுத்து கிளிநொச்சியிலும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு போக்குவரத்து பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் இருவர் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தனர். இச் சம்பவத்தைக் கண்டித்து வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.மாணவர்களுக்கு சார்பாக போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

மாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து தரப்பும் ஆதரவு

பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிங்கள காவல்துறையினரால் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து வடக்கு முழுவதும் இன்று கதவடைப்பு இடம்பெறுகின்றது.

தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் நடைபெறாத நிலையில், வியாபார நிலையங்களும் மூடப்பட்டு சன நடமாட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை வரவில்லை

சிங்கள காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான .பல்கலைக்கழக மாணவர்களின் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தஒ போராட்டத்திற்கு காவல்துறையினர் கடமைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்க ளிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

உயிரிழந்த சுலக்சன் சகோதரர் மரணமானது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது

உத்தரவினை மீறி வண்டியை நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.இவ்வாறு உத்தர வினை மீறிச் சென்ற அனைவரையும் பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்ல முடியுமா?

திடீர் விபத்து ஒன்று ஏற்பட்டது, அதனால் பொலிஸாரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் உயிரிழந்ததனை இந்த அனைத்து தரப்பினரும் அறிந்திருந்தார்கள்.

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இவ்வாறு மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணிக்கின்றனர், இது ஓர் சாதாரண விடயம் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்,

எனினும், இந்தக் கூற்றினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.இது ஓர் சாதாரண நிலைமையல்ல இது ஓர் அசாதாரண நிலைமை யாகும்.

வடக்கில் இடம்பெற்ற காரணத்தினால் நாம் இந்த சம்பவத்தை கைவிட்டு விடப் போவதில்லை.

மாணவர் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் நாடு முழுவதிலும் உள்ள பலக்கலைக்கழகங்களில் நாளை போராட்டம் நடத்தப்படும் என லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…