Super User Written by  Feb 26, 2017 - 57671 Views

தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!

2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, ‘பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். ‘நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி.

பரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாக, இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.

வல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள், இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் ‘குயில்’ என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.

மூத்த மகன் மனோகரன், அடுத்த மகள் ஜெகதீஸ்வரி, இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாட, கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார்.

எல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும். இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும், அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள். அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல… கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு… பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய்!
பார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் இராசம்மா. சிங்கள இனவாதக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த இராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரை, சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் இராசம்மா சொல்ல… அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார்.

பத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையே குறிப்பிட்டார்.

வேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் சிங்கள இராணுவம் இப்போது இடித்து நொறுக்கியது. இந்த வீட்டுக்கு இவர்கள் குடிவந்தபோது, ஏதும் அறியாத சிறுவன்தான் பிரபாகரன்.
ஆனால், 14 வயதில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை முதலில் கண்டுபிடித்தது பார்வதியே. சிறுசிறு போத்தல்களை எடுத்து வருவதும், பால்பேணிகளைக் கொண்டுவந்து காயவைப்பதும், பின்னர் அதை எடுத்துச் செல்வதையும் பார்வதி பார்த்தார்.
சின்னச்சோதி, நடேசுதாசன் ஆகிய நண்பர்கள் வந்து போவதும், பிரபாகரனைவிட மூத்த குட்டிமணியின் நட்பும் அன்னையை யோசிக்க வைத்தது. மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல் போயிருந்தது. மகனின் போக்கு பற்றி மெதுவாகச் சொன்னார் பார்வதி.
”நாலு மொட்டையர்களுடன் இணைந்து உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று வேலுப்பிள்ளை கேட்டார். ”நாலு மொட்டை நாளைக்கு நாற்பது மொட்டை ஆகும். அது நானூறு மொட்டை ஆகும்” என்று சொல்லிவிட்டுப் போன பிரபாகரனை இருவரும் அவரது வழியில் விட்டுவிட்டார்கள்.

அதன் பிறகு வந்த பொலிஸ் நெருக்கடிகள் அனைத்தையும் மனதார ஏற்றுக்கொண்டார் பார்வதி. 1975-ல் தொடங்கி 2010 வரை ஒரு நிமிடம்கூட மனதால் வருந்தியிருக்கவே மாட்டார். மாறாக, பெருமையாகக் கழித்தார். 2000-ம் ஆண்டில் பார்வதியின் கால்கள் பாரிசவாதம் காரணமாக நகர மறுத்தன.
இலங்கையிலும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கியதால் மகனுடன் இருக்கவே நினைத்தார் பார்வதி. 2003-ல் தாயகம் வந்தார்கள் இருவரும். சில வருடங்களில் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சி வலையில் சின்னஞ்சிறு தமிழர் தேசம் சிக்கிக்கொண்டது.

மக்களைப் பிரியா மன்னவனும்… மன்னனைப் பிரியா அன்னை அவளும் இருக்க… சொற்களால் சொல்ல முடியாத சோகம் அது!
புலியை வளர்த்த குயில் பறந்துவிட்டது. குயில் பாட்டும் புலிச் சீற்றமும் கேட்டுக்கொண்டே இருக்கும்!
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…