இலங்கையின் இறுக்கமும் அமெரிக்காவின் தளர்வும்
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 16, 2010
அத்துடன் மேற்குலகத்தினை குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியங்களை வெறுப்பேற்றும் வகையிலேயே உள்ளூர் செயற்பாடுகள் அமைந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வெளியுறவை பொறுத்தவரை உள்ளூர் மேற்குலக எதிர்ப்பாளர்களை தூண்டிவிட்டு அதன் பின்னால் நின்று மேற்குலகத்தினை கடிப்பதும் சண்டித்தனம் செய்வதும் அதிகரித்து வந்தன.
மஹிந்த தனது திட்டத்தினை நிறைவேற்ற மேற்குலகம் சரிவராது மறுவளமாக ஆசிய, கிழக்கு ஐரொப்ப்பிய நாடுகளின் நட்புடன் தனது திட்டத்தினை நகர்த்த தொடங்கியமை மேற்குலகை மேலும் ஆத்திரத்திற்குள்ளாக்கியது. என்றாலும் இந்த ஆத்திரத்தினை அடக்குவதற்கு மேற்குலகம் இரண்டு பாணிகளை கையாண்டது. ஒன்று மனித உரிமை என்றபேரில் கண்டித்தல், தண்டித்தல் மற்றையது மென்வழி முறையிலான உசுப்பேற்றல், உதவியழித்தல், உள்வாங்குதல் என்பதாகும்.
உசுப்பேற்றல், உதவியழித்தல், உள்வாங்குதல் என்பதனை இலங்கை சாதகமாக உள்வாங்கி, இலாவகமாக செயற்பட்டது. அதன் மூலம் விடுதலை கோரி போராடிய இயக்கமும் மக்களும் அழிக்கப்பட்டமையே மேற்குலகம் பெற்ற விளைவே ஒழிய தமது நகர்வுகளை திட்டமிட்டபடி கொண்டுபோகும் நிலையினை மேற்குலகம் பெற்றுகொள்ளவில்லை பெற மஹிந்த அரசும் விடவில்லை.
அடுத்தபடியாக மனித உரிமை, மனிதாபிமானம் என்ற பெயரில் இலங்கையினை மிரட்டி பார்த்தனர் அதற்கும் மஹிந்த அசைந்ததாக தெரியவில்லை. ஆசிய நாடுகள் அமெரிக்க மற்றும் மேற்குலக எதிர்ப்பு நாடுகளுடன் நட்புக்களை பேணி மேற்குலகத்தின் அழுத்தங்களையும், சுமைகளையும் எதிர்கொண்டுவரும் மஹிந்த எந்த மிரட்டுதல்களுக்கும் அடிபணிவதாக இல்லை. தொடர்ந்து மேற்குலகத்தின் ஆட்சிமாற்ற கனவும் பலிக்கவில்லை.
மாறாக கொழும்பில் அரசியல்வாதிகளினதும் சிங்கள மக்களினதும் எதிர்ப்பினை சம்பாதித்ததுடன் கொழும்பில் உள்ள மேற்குலக தூதரகங்களில் இலையான் கலைப்பு வேலைகள் மட்டுமே நடக்கும் அளவிற்கு ஓர் மெளனமான புறக்கணிப்பு போரினை சிங்களவர்கள் செய்துவருகின்றனர்.
இதனை நன்கு உணர்ந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீண்டும் ஒட்டி உறவாடி நிலைமையினை வழமைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி
சிங்கள பிரதேசங்களுக்கான தனியான அபிவிருத்தி திட்டம் (யூ.எஸ்.எயிட் மூலமானது) உடபட பல திட்டங்களை முன்வைத்தாலும் மஹிந்த சாம்ராட்சியம் அமெரிக்காவினை நம்ப தயாராக இல்லை.
அமெரிக்காவோ இல்லை இல்லை நாங்கள் உங்களோடுதான் எங்களையும் சேருங்கோ சேருங்கோ என்று பின்னால் வழிவதுபோலவே நடப்பு நிகழ்வுகள் இருக்கின்றன.
நடந்து முடிந்த பொது தேர்தலில் பெற்ற வெற்றிக்காக அமெரிக்கா இதுவரை மூன்று செய்திகளை அனுப்பி இருக்கின்றது. ரொபேட் பிளேக் ஒருபக்கம், ஹிலாரி ஒருபக்கம், பொதுவாக இன்னொரு அறிக்கையாக வாழ்த்துக்கள். ஆனால் மஹிந்த அரசு இவற்றை பெரிதாக பொருட்படுத்தவில்லை.
பின்னர் அமெரிக்க தூதரகம் எதையாவது செய்து ஊடகங்களில் செய்தி வரவேண்டுமே என்பதனால் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்த வாரம் திருகோணமலை பகுதியில் தமக்கும் இலங்கை படையினருக்கும் மனிதாபிமான னடவடிக்கை ஒத்திகை நடந்ததாகவும் இதனால் தமக்கும் இலங்கைக்குமான உறவு பலம்பெறும் எனவும் அமெரிக்க பசுபிக் கட்டளை பணியகம் கூறியது. ஆனால் இலங்கை ஊடகங்களில் இது பெரிதாக முக்கியப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் இப்போ மனிதாபிமான நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என்பது திருகோணமலையில் இப்போ தேவையா? போனவருடம் நடந்திருந்தால் கூட அதனை நியாயப்படுத்தி இருக்க முடியும்.
ஆகவே தேவைக்கு மிஞ்சிய வாழ்த்துக்களும், தேவை இல்லா நடவடிக்கைகளும் இலங்கையின் பின்னால் அமெரிக்கா வழிந்துசெல்வதாகவே பார்க்க முடிகின்றது.
இவர்களின்பரிசோதனை முயற்சிகளால் அழிந்தது, அழிக்கபட்டுகொண்டிருப்பது ஓர் நியாயமான விடுதலைப்போராட்டமும் அந்த விடுதலைக்காக உழைத்த மக்களுமே.
இலங்கையில் தமக்கு எதிரான சக்திகள் ஊடுருவதற்கும் இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கும் காரணம் அங்கு நடைபெறுகின்ற ஆயுதப்போரே என முடிவெடுத்து அதனை அழிப்பதன் ஊடாக மீண்டும் தமது ஆதிக்கத்தினை கொண்டுவரமுடியும் என்ற திட்டம் அமெரிக்கா, மேற்குலகம், கூடவே இந்தியாவிற்கும் இதுவரை தோல்வியே.
ஆனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறமுடியாது.
வியட்னாம், ஈராக், ஆப்கானிஸ்தான் உட்பட பல ஆபிரிக்க நாடுகளின் மீதான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கங்களிற்கு திட்டமிட்டவர்களே இலங்கை மீதான கொள்கைக்கும் வித்திட்டவர்கள். இவர்கள் இப்போதும் ஆங்காங்கே அலைந்து திரிகின்றனர். மில்லியன் டொலர்களிற்கு ஹோட்டல்களில் கூடி இருந்து திட்டமிடும் இவர்களுக்கு மக்கள், மனிதாபிமானம், விடுதலை, உரிமைகள் எல்லாம் அப்பாற்பட்டது.
புலிகளை அழித்துவிட்டோம் என்று மார்பு தட்டிக்கொண்டு அடுத்த திட்டங்களுக்கு தயாராகும் இவர்களது திட்டங்கள் பலிக்குமா? அது தமிழர்களுக்கு நன்மை பயக்குமா?
இலண்டனில் ,ஒரு பெரும் விடுதியில், நள்ளிரவில், மதுபானங்களை அருந்திக்கொண்டு மேற்படி கொள்கைகளை வகுக்கும், திட்டமிடும் நபர்களுள் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார். எல்.ரி.ரி. அவுட், சரத்பொன்சேகா அவுட், அடுத்தது பக்ஷே குடும்பத்திற்குள்ள ஏதாவது ..... அவ்வளவும் தான் அதற்கு மேலே அந்த நபர் எதுவும் பேசவில்லை. இப்படித்தான் அவர்களது வாழ்க்கை போகின்றது. பூனைக்கு விழையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்று சும்மாவா சொன்னார்கள்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















