வாக்குறுதியினை நிறைவேற்றவும் இல்லையேல் நம்பிக்கை கெட்டுவிடும் - பான் கி மூன்
"இலங்கையில் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் அனைவரும் எதிர்வரும் ஜனவரிமாத இறுதிக்குள் நிச்சயம் தங்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவார்கள் என்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பிரதிநிதிக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். இந்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு தவறினால் ஜனாதிபதி மஹிந்த மீதான நம்பிக்கை கெட்டுப்போய்விடும். எனவே இனியாவது வாக்குறுதிகளை ஜனாதிபதியும் அவரது அரசும் நிறைவேற்றவேண்டும்''
இப்படி வலியுறுத்தியிருக்கிறார் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன்.பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான "பிரான்ஸ் 24" இற்கு வழங்கிய விசேட பேட்டியில் இலங்கை விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே ஐ.நா. செயலர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் இப் பேட்டியில் இலங்கை விவகாரம் குறித்து மேலும் தெரிவித்துள்ளவையாவன:
"வவுனியா முகாம்களில் சுமார் 3 லட்சம் தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதிக்குள் தங்கள் தங்கள் சொந்த இடங்களில் நிச்சயம் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனது விசேட பிரதிநிதியாக அந்நாட்டுக்கு விஜயம் செய்த ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான தலைமைப் பொறுப்பதிகாரி லியன் பாஸ்கோவுக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார். இது எமக்கு மிகுந்த உற்சாகத்தையும், புத்தூக்கத்தையும் தந்துள்ளது.
இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்பதில் தமக்கு இருக்கும் ஈடுபாட்டை இந்த உறுதிமொழி மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். இது அவரின் நேர்மையுடன் சம்பந்தப்பட்ட விடயமாக உள்ளது. அவர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் சந்தேகம்கொள்ளவேண்டி ஏற்பட்டுவிடும்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடயத்தில் எனது பற்றுறுதியை நன்றாகவே வெளிப்படுத்தி உள்ளேன். எந்தவிதமான கால தாமதமும் இல்லாமல் இந்த அகதிகள் அனைவரும் உடனடியாகத் தங்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அவர்களின் மனித உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளும் உடனடியாக வழங்கப்படவேண்டும் என்றெல்லாம் நான் இலங்கைக்கான விஜயத்தின்போது வலுவான கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.
எனது பிரதிநிதியாக லியன் பாஸ்கோவை அண்மையில் இலங்கைக்கு அனுப்பி வைத்தேன். இலங்கைக்கான எனது விஜயத்தின் பின் நான் கடந்த அணிசேரா மாநாட்டின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்திருந்தேன். அவர் எனது இலங்கை விஜயத்தின்போது எனக்கு வாக்குறுதி வழங்கியிருந்த விடயங்களைத் தவறாமல் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவருக்கு அங்கு வலியுறுத்திக் கூறினேன். கடந்த வாரம் அவருடன் தொலைபேசியில் கூட உரையாடினேன். அண்மையில் எனது பிரதிநிதி லியன் பாஸ்கோ மூலமாக அவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளேன். அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என்றார்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















