ரணில் அவர்களின் GTV தொலைக்காட்சிக்கான நேர்முகம்

புதன்கிழமை, ஜனவரி 20, 2010
Ranil GTV
2005 இல் ஜனாதிபதி தேர்தலில் புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று தடுத்தது என்று ரணில் கூறியுள்ளார். மட்டுமன்றி கருணா புலிகள் இயக்கத்தை விட்டு விலகியமைக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக புலிகள் மாவிலாறில் போர் தொடங்கிய பின்னர் அரசாங்கத்தின் கட்டளையினை ஏற்ற சரத்பொன்சேகா குறித்த காலப்பகுதியில் புலிகளை அழிக்கவேண்டியதாயிற்று என தமது தரப்பில் எந்த தவறும் இல்லை என்று பூசி மெழுகியுள்ளார். ரணில்.

ரணில் ஐயாவுக்கு,

சரத்பொன்சேகா மஹிந்தவுடன் சேர்ந்திருக்கும் போது  அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான  போரில் வெற்றியீட்டி கொண்டிருக்கையில், அந்த வெற்றி உண்மையில் தமக்குதான் என்று அதற்கான காரணங்களை அடுக்கி கொண்டே போனதை தமிழர்கள் மறக்கவில்லை.

அதாவது கருணாவை தாம் பிரித்து உள் பகையினை மூட்டி புலிகளை பலம் இழக்க செய்ததாகவும் அத்துடன் பேச்சுவார்த்தை என்று கூறி சர்வதேசத்தின் வலைப்பின்னல்களுக்குள் மாட்டிவிட்டதில் இருந்து தாமே புலிகளை பலவீனப்படுத்தியதாக கூறினார் ரணில். மேலும் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிற்கான பிரச்சாரத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர்களும், தற்போது மஹிந்த ஆட்சியில் அமைச்சராக இருப்பவரான  ராஜித சேனாரட்ன அவர்கள் கருணாவை பிரித்து தாம் புலிகளை பலயீனப்படுத்தியுள்ளதாக கூறியிருந்தார்.

ஆகவே கருணா பிரிந்ததில் இருந்து 2010 ஜனவரி 15 ஆம் திகதிவரை புலிகளை பலமிழக்க செய்ததில் தமக்கே முக்கிய பங்கு என கூறிய ரணில் அவர்களும், ஐக்கிய தேசிய கட்சியும் இப்போ தேர்தலிற்காக தமிழர்களுக்கு ஒரு கதையும் சிங்களவர்களுக்கு இன்னொரு கதையும் கூறுவது வேடிக்கை.

அல்லது  தன்னை நரி என அன்ரன் பாலசிங்கம் கூறியதாக கூறும் ரணில் அதனை நிரூபிக்கின்றாரா என கேட்கவேண்டியுள்ளது. மட்டுமல்ல இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை சொல்லுவதனால் தான் கடந்த நான்கு தடவையும் சிங்களவர்களால் தலைவராக தேர்ந்த்தெடுக்கப்படவில்லை என்பது நிரூபணமாகின்றது.