முன்னாள் கடற்படைத் தளபதி தனக்கு வழங்கப்பட்ட பதவி தொடர்பாக அதிருப்தி

வியாழக்கிழமை, யூலை 16, 2009
Sea comander

முப்படைகளின் தலைமை அதிகாரிப் பதவிக்கு சட்ட தகுதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும் சரத் பொன்சேகா அதனைப் பொறுப்பேற்றுக்கொள்வாரா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருந்தது. இந்நிலையில்தான் முப்படைத் தலைமை அதிகாரிப் பதவியை சரத் பொன்சேகா ஏற்றுக்கொள்ள மறுத்தால் அந்தப் பதவியை வசந்த கரணகொடவுக்குத் தருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உறுதியளித்திருந்தார். அந்தப் பதவியை சரத் பொன்சேகா ஏற்றுக்கொண்டால் வசந்த கரணகொடவுக்கு பிரித்தானியாவுக்கான அல்லது மற்றொரு ஐரோப்பிய நாட்டுக்கான தூதுவர் பதவியை வழங்குவதற்கும் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் இந்த வாக்குறுதிகளை மீறும் வகையில் மகிந்தவுக்கான பாதுகாப்பு ஆலோசகராக திடீரென நியமிக்கப்பட்டமை இவருக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
 இந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் முகமாகத்தான் அரச தலைவரிடம் இருந்து நியமனக் கடிதத்தை இடது கையால் அவர் பெற்றுக்கொண்டதாக அவருடன் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதுகாப்புத் தலைமையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட திடீர் மாற்றம் பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகிந்தவுக்குப் புதிய தலையிடிகள் உருவாகியுள்ளன. இந்த நெருக்கடிகளைத் தொடர்ந்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பதவிக்கு வசந்த கரணகொட மாற்றப்படலாம் என அரச உயர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் முதற்பெண்மணி சிராந்தி ராஜபக்ச தொடர்ச்சியாகக் கொடுத்துவரும் அழுத்தங்களையடுத்தே நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக அவரை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், அணிசாரா நாடுகளின் உச்சி மாநாட்டுக்காக எகிப்து சென்றுள்ள மகிந்த ராஜபக்ச கொழும்பு திரும்பியவுடன் இது தொடர்பான அடுத்த காய் நகர்த்தல் இடம்பெறும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வசந்த கரணகொடவின் மனைவி அசோக்கா கரணகொட மகிந்தவின் மனைவி சிராந்தி ராஜபக்சவின் மிகவும் நெருங்கிய சிநேகிதியாவார். அந்த அடிப்படையிலேயே இந்த விடயத்தில் சிறிலங்காவின் முதலாவது பெண்மணி இப்போது தலையிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவரது கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அதன்படி வசந்த கரணகொடவின் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு உயர்மட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் கூட, இவ்வளவு சடுதியாக மகிந்த இதனை மேற்கொள்வார் என்பதை பாதுகாப்பு உயர்மட்டத்தில் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.