மனோவுக்கு மல்வத்த பீடாதிபதி ஆசீர்வாதம்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
அரசியல் காரணங்களை முன்வைத்து நடத்தப்படும் எந்த எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யுமாறு கண்டி மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

கண்டி மல்வத்தை பீடத்திற்கு சென்று மகாநாயக்கரை மனோ கணேசன் சந்தித்தபொழுது இந்த கருத்தை பீடாதிபதி தெரிவித்துள்ளார். இத்தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உங்களுக்கு எதிராக கண்டி மாநகரத்தில் ஜாதிக ஹெல உறுமய கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ததை நானும் அறிவேன். இதுபற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். இதற்கு முன்னர் ஒருமுறை தமிழ் தேசிய கூட்டமைப்பை நான் சந்தித்ததை காரணங்காட்டி எனக்கு எதிராகவும் இதே கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.புலிகளை கண்டிக்கு நான் கொண்டுவந்தாக கூறி பிரசாரம் செய்தார்கள்.

இந்நிலையில் இன்று உங்களுக்கு எதிராக காட்டப்படும் எதிர்ப்புகளை கணக்கில் எடுக்கவேண்டாம். உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். அதன் மூலமாக நீங்கள் வெற்றி பெற்று வருவீர்கள். இந்நாட்டிலிலே பிறந்த ஒவ்வொரு பிரஜைக்கும் இந்நாட்டின் எந்தவொரு மாவட்டத்திற்கும் சென்று தேர்தல்களில் போட்டியிடுவதற்கு உரிமை இருகின்றது. கண்டி மாவட்டத்திலே பெருந்தொகையான தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். அவர்களது வறுமை நிலைமை மாற்றப்படவேண்டும்.

கடந்த காலங்களில் கண்டி ஹந்தானை பகுதியிலே வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு எமது மல்வத்தை பீடத்தின் மூலம் வீடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த பின்தங்கிய தோட்டத் தொழிலாளர்களுக்கு நீங்கள் வெற்றி பெற்று பெரும்பணியாற்ற வேண்டும்.

தமிழ் மக்களுடன் சிங்கள, முஸ்லிம் மக்களையும் அரவணைத்துக்கொண்டு நீங்கள் செயற்படவேண்டும். இந்நாட்டிலே யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டதால் எல்லா பிரச்சினைகளும் முடிவிற்கு வந்துவிட்டதாக அர்த்தப்படாது.

வடக்கிலே இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக குடியமர்த்தப்படவில்லை என்பது எனக்கு தெரியும். நான் சில மாதங்களுக்கு முன்னர் வவுனியா முகாமக்களுக்கு பொருட்களை அனுப்பி வைத்திருந்தேன். எதிர்க்காலத்தில் யாழ்ப்பாணம் செல்வதற்கு எண்ணியுள்ளேன்.

இந்நாட்டிலே அரசியல்வாதிகளுக்கு பணியாற்றுவதற்கு நேரமில்லை என்பதாக தோன்றுகிறது. ஏனென்றால் இந்த அரசாங்கம் ஒன்றின் பின் ஒன்றாக தேர்தல்களை நடத்திக்கொண்டிருக்கின்றது." என கண்டி மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது மனோ கணேசன் மகாநாயக்கரிடம் தெரிவித்தாவது, "நான் கொழும்பில் இருந்து கண்டிக்கு வரவில்லை. கண்டியிலிருந்து கொழும்பிற்கு சென்று மீண்டும் கண்டிக்கு எனது கடமையை நிறைவேற்றுவதற்காக வந்திருக்கின்றேன்.

எனது வெற்றிக்கு உங்களது ஆசி எனக்கு தேவை. பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள்ளே அதிகாரத்தை பிரித்து சமத்துவத்துடன் சகல சமூகங்களும் வாழவேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

அத்துடன் அந்த குறிக்கோளை அடைவதற்கான எனது பயணம் வன்முறையற்ற, ஆயுதமற்ற ஜனநாயக பயணமாகும். கண்டி மாவட்டத்திலே கடந்த மூன்று நாடாளுமன்ற தேர்தல்களிலும் கிடைக்காத தமிழ் பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றுத்தருவதே எனது கடமையாகும்.

இதற்கு தமிழர்கள் மாத்திரமல்ல, கண்டியிலே வாழும் சிங்கள, முஸ்லிம் வாக்காளர்களும் எனக்கு வாக்களிப்பதற்கு முன்வந்துள்ளதை எண்ணி பெருமையடைகின்றேன்" எனத் தெரிவித்தார்.