படாங் நகர் புதைந்தது, நேற்றைய பூகம்பத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி!

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 2009
Earth quake
மேற்கு சுமத்திரா மாகாணத்தின் தலைநகரான படாங் நகரில் 9 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அங்கு நேற்றுமுன்தினம் 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது. இதன் காரணமாகப் பல கட்டடங்கள் முற்றாகத் தரைமட்டமாகியுள்ளதுடன் தொலைத் தொடர்பு வசதிகளும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை கடும் மழைக்கு மத்தியிலும் மீட்புப் பணிகள் இடம்பெற்றன.  "பூகம்பம் காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்கிலோ, ஆயிரக்கணக்கிலோ இருக்கலாம்; அநேகமாக ஆயிரக்கணக்கில் இருக்கலாம்'' என இந்தோனேஷிய சுகாதார அமைச்சர் சிட்டி படில்லா சடாரி தெரிவித்துள்ளார்.

ஏற்பட்டுள்ள பாரிய சேதத்தை அடிப்படையாக வைத்தே தாம் இந்த மதிப்பீட்டுக்கு வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று மற்றொரு பூகம்பம் தாக்கியது நேற்று வியாழக்கிழமை சுமாத்திரா தீவுகளை மற்றுமொரு பூகம்பம் தாக்கியதால் பாரிய அச்சநிலை உருவானது. எனினும், இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் தெரியவரவில்லை. படாங் நகரின் மையப் பகுதி முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என அவுஸ்திரேலிய பெண் ஒருவர் அந்த நாட்டு வானொலிக்குத் தெரிவித்துள்ளார். சகல கொங்கிறீட் கட்டடங்களும் தரை மட்டமாகின. மருத்துவமனைகள், சந்தைகள் அனைத்தும் தரைமட்டமாகிவிட்டன. பலர் கொல்லப்பட்டுள்ளனர். பல பகுதிகள் எரிந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.