தேர்தலில் தோற்றவர்க்கு கிழக்கின் ஆழுநர் பதவி

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 16, 2010
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் கட்சியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்க மஹிந்த வாக்குறுதியளித்துள்ளார் என்று மௌலானாவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்பாக அவருக்கு "கிழக்கின் உதயத்'தின் தலைவர் பதவியை வழங்கி, அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தின் பின்னர் அவரை ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி முடிவெடுத்துள்ளார் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அமைச்சரவை அமைக்கப்பட்டவுடன் கிழக்கின் உதயத்தின் தலைவர் பதவி வழங்கப்படும் என்று மஹிந்த மௌலானாவிடம்  உறுதியளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மௌலானாவை தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து அவருக்கு அமைச்சுப் பதவியொன்றையும்  வழங்குமாறு மௌலானாவிற்கு நெருக்கமான சிலர் மஹிந்தவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த வேண்டுகோளை நிராகரித்த மஹிந்த அதற்குப் பதிலாகவே ஆளுநர் பதவியைத் தருவதற்கு உறுதியளித்தார் என்றும் கூறப்படுகின்றது.