தமிழர்களின் ஆயுத போராட்டத்தினை நியாயப்படுத்தும் தேர்தல் முடிவுகள்

புதன்கிழமை, ஜனவரி 27, 2010
எல்லோரும் முக்கிவிட்டார்கள் நாங்களும் முக்கிப்பார்த்தால் என்ன என்று சில புத்திசீவிகள் உட்பட மேற்குலகமும் முண்டியடித்துக்கொண்டு ஆட்சி மாற்றத்தினை செய்யலாம் என நினைத்த கனவு பகற்கனவாக போய்விட்டதனை மஹிந்தவின் மிகப்பெரிய வெற்றி காட்டி நிற்கின்றது.
அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலினை விட இந்த தேர்தலில் மஹிந்த கூடுதல் வெற்றியினை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் மேற்குலகத்திற்கு சிங்கள மக்கள் ஒன்றை மட்டும் மிக தெளிவாக சொல்லி இருக்கின்றார்கள். அதாவது எப்படித்தான் பஞ்சம், பசி, லஞ்சம் ஆகியன எங்களுக்கு இருந்தாலும் எங்களுக்கு இலங்கை ஓர் சிங்கள பெளத்த நாடு, அது எமக்கு மட்டுமே சொந்தம் என்பதனை தெட்ட தெளிவாக கூறியுள்ளனர்.

மறு பக்கமாக கூறின் சிறுபான்மை  மக்களுக்கோ அன்றி வேறெந்த நாட்டவரின் நலனிற்கோ நாம் ஒருபோதும் இடமளியோம் என்பதே தேர்தல் முடிவு வெளிப்படுத்துகின்றது. இந்த விடயத்தினை மிக ஆளமாக உணர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். எத்தனை தடவைகள் சர்வதேச சமூகத்திற்கு எடுத்து கூறினாலும் எல்லாவற்றிற்கும் புலிகள் மீதே பழிபோட்டுவிட்டு தாம் தப்பித்துக்கொள்ளும் யுக்திகள் எவ்வளவு பொய்மையானது என்பதனை இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளது.

அதாவது சிறுபான்மை மக்களிற்கு ஏதாவது செய்யலாம் என வாய் தவறி ஒரு வேட்பாளர் கூறினால் கூட அவர் சிங்களவர்களால் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதே யதார்த்தம். மட்டுமன்றி எவராவது வெளினாட்டவர்களுடன் கூட்டு சேர்கின்றார்கள் என்றாலும் அதே நிலைதான். ஆகவே  மேற்குலகின் ஆலோசனைகளும் திட்டங்களும் கூடவே அதனை நம்புவர்களும் இனியாவது தமிழர்களின் நியாயபூர்வ போராட்டங்களை நம்பி அதற்கு முழு அளவில் பக்கபலமாக இருக்கவேண்டும். இருக்க முயற்சி செய்யவேண்டும்.

மேற்குலகை பொறுத்தவரை பிரச்சினை இல்லை அவர்கள் தமது காரியங்களை ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றுவர். ஆனால் அதனை நம்பி பின்னால் செல்லும் தமிழ் அரசியல் வாதிகள்,புத்திஜீவிகள் தான் இந்த தேர்தல் முடிவுகள் பற்றி ஜோசிக்கவேண்டும். அதாவது ஜன நாயக ரீதியில் அல்லது இலங்கை பாராளுமன்ற யாப்புக்குள் சென்று எமக்கு எதனையும் பெற முடியாது. அதனை விட சிங்களவரிடம் கை நீட்டி பிச்சை எடுப்பது மேல்.

முடிந்த முடிவாக எப்படி சர்வதேசத்துடன் எமது மக்களின் போராட்டத்திற்கான நியாயப்பாடுகளை எடுத்துக்கூறுவது, அதற்கான ஆதரவினை உலகம் முழுவதும் பெறுவது, ஒரே அணியின் கீழ் எமது போராட்டத்தினை முன்னெடுத்து செல்வது, மனிதாபிமான செயற்பாடுகள் ஊடாக மக்களிற்கு ஏதாவது செய்வது என்பதிலேயே உள் நாட்டிலும் , வெளி நாட்டிலும்  செயற்படவேண்டும். அதை விடுத்து யார் வந்தால் பிச்சை போடுவார்கள் என்று ஆய்வு செய்து அதற்கேற்ப வளங்களை பிளவு பட செய்வது தவிர்க்கப்படவேண்டும்.
சிங்கள மக்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு பிச்சைபோடுபவர்களை தெரிவு செய்ய மாட்டார்கள்.