தமிழரின் தாயக நிலமான மணலாற்றில் சிங்கள குடியேற்றங்கள்
தமிழரின் பூர்வீக நிலமான மணலாற்றில் சிங்கள குடியேற்றம் மேற்கொள்ள ஸ்ரீலங்கா அரசு திட்டம் தீட்டி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பான திட்டத்தினை நேற்று முன்தினம் மணலாற்றுக்கு சென்ற மகிந்த அரசின் மூத்த ஆலோசகரும்,சகோதரருமான பசில் ராஜபக்ச அவர்கள் வகுத்துள்ளார்.
ஏற்கனவே தமிழர் தாயகத்தை பிரிக்கும் கபட நோக்குடன் இப் பகுதியில் குறிப்பிட்டளவு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டிருந்த போதிலும், போர் காரணமாக இவர்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இவ் இடம்பெயர்ந்தவர்களை உடன் மீள் குடியேற்றுவதுடன் மேலும் பல புதிய குடியேற்றங்கள் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும் இவ் இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் நாளுக்கு முன்னர் மீளக் குடியேற்றப்பட இருப்பதாகவும், இதற்கென 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு, வீதிப் புனரமைப்புப் பணிகள் இடம்பெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் தமிழ் மக்களை தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற அரசு இழுத்தடிப்பு செய்து வரும் அதேவேளை தமிழரின் பூர்வீக நிலமான மணலாற்றில் சிங்கள மக்களை மீள் குடியேற்றம் செய்வதில் தீவிரமாக செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் மணலாற்று பிரதேசத்தின் மொறவேவ, கஜபாபுர,கல்யாணிபுரம்,ஜானகபுர போன்ற
இடங்களில் குடிநீர்,மின்சாரம் போன்ற அபிவிருத்திப் பணிகளை உடன் மேற்கொள்ளுமாறு பதவியா பிரதேச சபைக்கு பசில் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதுடன் இப் பகுதியில் கண்ணிவெடிகள்,மிதிவெடிகளை அகற்றுவதற்கு அங்கு நிலை கொண்டுள்ள படையினர் ஈடுபட்டுவருவதாகவும் பசில் ராஜபக்ச கூறியிருக்கின்றனர்.
மணலாற்றை சிங்கள அரசு கடந்த 1980ல் ஆக்கிரமித்தது. உடனேயே மணலாறு என்ற தமிழ்ப்பெயரை அப்படியே சிங்களத்தில் மொழிபெயர்த்து ”வெலிஒயா” என பெயர் சூட்டியதுடன் அங்கிருந்த தமிழ் கிராமங்களுக்கும் சிங்களப்பெயரையே சூட்டியது. அத்துடன் தமிழ்க்கிராமம் ஒன்றுக்கு மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா ஞாபகார்த்தமாக ஜானகபுர என்ற பெயரும் தமிழ்க் கிராமத்திற்குச் சூட்டப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















