கருணாவுடன் சேர்ந்து அலிஷாகிர் மெளலானா கிழக்கில் மஹிந்தவுக்கு தேர்தல் பிரச்சாரம்!

சனிக்கிழமை , டிசம்பர் 26, 2009
ashaahir
கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து ஓடியதற்கு காரணமாக இருந்த சயீத் அலிஷாகிர் மெளலானா கடந்த வாரம் வெளி நாடு ஒன்றில் அஞ்ஞாதவாசம் செய்து  விட்டு இலங்கை வந்துள்ளார். இவரை கருணா அவர்களே விஐபி லோஞ் வரை சென்று அழைத்து சென்று மஹிந்தவினை சந்திக்க வைத்துள்ளார்.
அதன் பின்னர் வழமையாக மஹிந்த தனதுபாணியில் அவருக்கு பதவியும் பாதுகாப்பும் கொடுத்து  கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று தரவேண்டும் எனவும் அதற்கு கருணாவுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு கைமாறு கேட்டுள்ளார் அதன்படி அவர் கிழக்கு மாகாணத்தில் களத்தில் இறங்கியுள்ளதாக  கிழக்கு முஸ்லிம் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

கருணாவுக்கு மஹிந்த கட்சி புதிது அல்ல அவரது அரசியல் வாழ்க்கை 1988 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திர கட்சியிலேயே ஆரபிக்கப்பட்டது பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து 1994  இல் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2002 இலும் பாராளுமன்றம் சென்றார் இவர் இந்த காலப்பகுதியிலேயே கருணாவை பிரிக்கும் வேலையிலும் ஈடுபட்டார். இவரின் மனைவி தனோஜா தமிழராவர்.  சயீத் அலிஷாஹீர் மெளலானா அவர்கள் ஜூன் 25 , 1956 இல் ஏறாவூரில் பிறந்த இவர் தமிழ் மக்களிடமும் கணிசமான அளவு செல்வாக்கை பெற்றதனாலேயே இவரை மஹிந்த களத்தில் இறக்கியுள்ளார். இவருக்கு அடுத்த பாராளுமன்றத்தில் தேர்தலில் போட்டியிட சீட்டும் வழங்கப்படும் என மஹிந்த உத்தரவாதம் அளித்துள்ளார்.

இதே வேளை கிழக்கு மாகாணத்தில் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது அதாவது மஹிந்தவினை வெற்றிபெற செய்வதில் யார் முன்னணியில் நிற்பது என்பதே அந்த போட்டியாம். எது எப்படி இருப்பினும் மஹிந்த அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணியின் சார்பில் கருணா, மெளலானா உடபட அனைவரையும் போட்டியிடசெய்து வெற்றி பெறவேண்டும் என்பதே இலக்கு அதற்கான வேலைத்திட்டத்தில் மஹிந்த இறங்கியுள்ளார். என்றாலும் பிள்ளையான் தனது இருப்பை உறுதி செய்வதற்காக மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் செயற்படவேண்டியதேவை உள்ளது.

ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து பிள்ளையானை ஓரங்கட்டுவதில் கருணா ஈடுபட்டாலும் கருணாவினை விட பிள்ளையானுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகவே அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே தான் மஹிந்தவும் கொஞ்சமாவது  அனுசரித்து போகுமாறு கருணாவுக்கு கூறியுள்ளார். கடந்த 20 ஆம் திகதி மஹிந்தவை  நேரடியாக சந்தித்த பிள்ளையான் கருணாவின் கொடுமை தாங்க முடியவில்லை இதனால் பெரும் பிரச்சினை எழும் என கெஞ்சியும் மிரட்டியும் பேசியுள்ளதாகவும் அதற்கு மஹிந்த நான் பார்க்கின்றேன் என கூறியதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவித்தன.

உண்மையில் மஹிந்தவுக்கு தலையிடி பிள்ளையான் அல்ல மாறாக பிள்ளையானுக்கு மறைமுகமாக உந்து சக்தியாக இருக்கும் இந்தியாவாகும் பிள்ளையானை எதிர்ப்பு அரசியல் செய்யுமாறுதான் இந்தியா அறிவித்துள்ளது என்பது இன்னொரு கதை. ஆகவே பாராளுமன்ற தேர்தலில் பிள்ளையானை தோற்கடித்து கருணாவினையும் அலிஷாஹிர் மெளலானாவையும் வைத்து தான் அரசியல் செய்யவேண்டும் என்பதே மஹிந்தவின் திட்டம்.

இந்த மாதம் பிள்ளையான் அம்பாரை மாவட்டம் திருக்கோவிலுக்கு சென்றபோது பிள்ளையானின் ஜீப் இனியபாரதியினால் ( புஸ்பாகரன் இவர் கருணாவின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் - சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்) தீ மூட்டப்பட்டது அந்த வேளை பிள்ளையான் குழு பொலிஸில் புகார் செய்யப்பட்டும் இனிய பாரதி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிள்ளையான் மஹிந்தவிடம் முறையிட்டுள்ளார். ஆனால் மஹிந்த எல்லாவற்றுக்கும் பார்க்கலாம் என கூறியுள்ளார். இதனால் பிள்ளையானும் அவரது சகாக்களும் மனம் நொந்து போனாலும் மஹிந்தவினை பற்றி நிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதாவது மதில் மேல் பூனைபோல கூட இருக்க முடியாத நிலயே பிள்ளையானுக்கு என கூறப்படுகின்றது.

அம்பாரையில் இவர்களது அடிபிடிகளை பார்த்த மக்கள் சிலர் மனம் நொந்து போயுள்ளனர் அதாவது ஒரு சிங்களவனுக்காக இவங்க ரெண்டுபேரும் குத்துப்படுறாங்களே என்பதே மக்கள் குமுறல். மக்கள் குமுறல் வாக்குமூலம் வெளிப்படுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.