உலகத்தமிழர் பேரவை மா நாட்டில் புலிகளை கடுமையாக விமர்சித்த டேவிட் மில்லிபான்ட்

புதன்கிழமை, பெப்ரவரி 24, 2010

GTF
இரண்டாவது தடவையாக உலகத்தமிழர் பேரவை இலண்டனில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தினுள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றினார். இந்த உரையாடலில் புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்தார்கள் என வழமையான புராணத்தினை பாடியபின்னர் புலிகளும், அரசும் போர்க்குற்றம் புரிந்ததாக கூறியதுடன் இருவரையும் விசாரிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். பிரித்தானிய அரசாங்கம் தமிழ் மக்கள் உரிமை தொடர்பில் தனது நிலைப்பாட்டினை மாற்றவில்லை என்பது டேவிட் மில்லிபான்ட் அவர்களின் உரையில் இருந்து தெரியவருகின்றது. எவ்வளவு செலவழித்து பாட்டி வைத்து கட்சிக்கு காசு சேர்த்து கொடுத்தாலும். எத்தனை தடவை பெரும் செலவில் கூட்டங்கள் நடத்தினாலும் பிரித்தானியா தனது அறிக்கைகளை திகதி மாற்றம் செய்து விடுமே தவிர உட்கிடக்கைகளை மாற்றாது.

பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுணை, இன்று (24-02-2010) பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து உரையாடியுள்ளனர்.
நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெற்ற சந்திப்பில், உலகத் தமிழர் பேரவை முன்னெடுக்கவுள்ள மக்களை விடுவித்தல், போர்க்குற்ற விசாரணைக்கான செயற்பாடுகள், மற்றும் மக்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசை பற்றியும் வினயமாக எடுத்துரைக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த கோர்டன் பிறவுண், சிறீலங்கா அரசுக்குக்கான தமது அழுத்தம் தொடர்ந்து வருவதாகவும், அண்மையில் அதிபர் தேர்தல் நடைபெற்றபோதுகூட அரசின் சனநாயக விரோதப்போக்கைக் கண்டித்து கடிதம் எழுத்தியிருந்ததாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் பற்றிய விடயத்தில் சிறீலங்கா அரசு அலட்சியத் தன்மையைக் கடைப்பிடித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயப்படும் எனவும் அவர் கூறினார்.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை சிறீலங்காவில் நடத்தவிடாது தடுத்து, அவுஸ்திரேலியாவில் நடத்துவதற்கு தான் ஏற்பாடு செய்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரித்தானியப் பிரதமர் கோர்டண் பிறவுன், தமது அரசு முடிந்தளவு மேலும் பல அழுத்தங்களை சிறீலங்கா அரசுக்குக் கொடுக்கும் எனக் கூறினார்.
தமிழ் மக்களின் விருப்பு பற்றி தமிழீழத்தில் கருத்துக் கணிப்பு நடத்துவது பற்றி உலகத் தமிழர் பேரவையின் அங்கத்தவர்கள் சுட்டிக்காட்டியபோது, அதனை தமது அரசு மட்டும் தனித்து செய்துவிட முடியாது எனவும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தே இதற்கான செயற்பாடுகளில் இறங்க வேண்டும் எனவும் கோர்டன் பிறவுண் கூறினார்.

பிரித்தானியப் பிரதமருடனான உலகத் தமிழர் பேரவையின் சந்திப்பு, பிரித்தானிய வெளிவிகார அமைச்சர் உட்பட பல அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டமை போன்ற விடயங்கள், கொழும்பு அரச வட்டாரத்தில் பாரிய எரிச்சலைக் கிளப்பியுள்ளதுடன், அரச மட்டத்திலான கருத்து மோதல்களையும் தோற்றுவித்துள்ளது.