இலங்கைக்கு விசேட குழு அனுப்பிவைக்கப்படும் - மன்மோகன்சிங்

செவ்வாய்க்கிழமை, யூலை 20, 2010
இலங்கைத் தமிழ் மக்களின் மறுவாழ்வு பணி குறித்து ஆராய்வதற்காக அதிகாரிகள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

இலங்கைத்  தமிழ் மக்களின் மறுவாழ்வு பணி குறித்து ஆராய்வதற்காக சிறப்புப் பிரதிநிதியை அங்கு  அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்தியப்  பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த சனிக்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி  கோரியிருந்தார்.

மேலும் காங்கிரஸ் தலைவி  சோனியா காந்தி தலைமையில் புதுடில்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இலங்கைத் தமிழர்களின்  மறுவாழ்வு, தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் உள்ளிட்டவை தொட ர்பில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்  டி.ஆர்.பாலு  பேசினார்.

இந்நிலையிலேயே, மு.கருணாநிதியின் கோரிக்கைக்கு அமைய அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று  இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

இந்திய அரசாங்கம்,  இலங்கைத் தமிழர்களின்  மறுவாழ்வுப் பணிகளுக்காக  வழங்கிய நிதி சரியான முறையில்  செலவிடப்படுகின்றதா என்பது தொடர்பில்   குறித்த அதிகாரிகள் குழு மூலம் அறிவதற்கான நடவடிக்கைகள்   எடுக்கப்படும் எனவும் மன்மோகன் சிங் கூறினார்.