இரு விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி
திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010
சீனாவிடமிருந்து மிகவும் இரகசியமாக பெற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதங்களும் தோட்டாக்களும் கொரிய பிரஜைகளின் உதவியுடன் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 கப்பல்களில் பகுதி பகுதியாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன எனவும், ஏவுகணைக் கூடு ஒன்று விடுதலைப் புலிகளின் முகாமொன்றிலிருந்து மீட்கப்பட்டு தற்போது ரத்மலான விமானப்படைகளின் முகாமில் வைக்கப்பட்டுள்ளது எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதி மன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு கப்பல் மூலம் ஆயுதங்களைக் கொண்டுவந்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் தொண்டைமானாறு எம்.ராஜேந்திரன் கருணாகரன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு ஹெலிகொப்டரை அழித்ததார் எனக் கூறப்படும் அருளானந்தன் நிஷாந்தன் ஆகிய இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவு குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆயுதக் கொள்வனவின் பின்னர் அவற்றை விநியோகிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய விடுதலைப் புலிகளைக் கண்டறிய வேண்டியுள்ளதால் சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் அனுமதிகோரினர்.
பின்னர் வேண்டுகோளுக்கு அனுமதியளித்த நீதிவான் எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைகளின் நிலைமை குறித்து மீண்டும் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி














