இன்று மாற்று வலுவுள்ளோர் தினம்
வியாழக்கிழமை, டிசம்பர் 3, 2009
சிங்கள அரசினால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பேரில் தமிழ் மக்கள் மீது ஏவிவிடப்பட்ட மிகக்கொடிய போரில் சிக்கி கிட்டதட்ட 50,000 மக்கள் வரையில் தமது உடல், உள தாக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டு தமது அன்றாட வாழ்க்கையில் ஏதோ ஒரு பகுதியினை செய்ய முடியாதவாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கையிலேயே தமது உணர்வுகள், உடல் உறுப்புக்கள் ஆகியவற்றில் ஏதோ ஒன்றை இழந்தவர்கள் ஒருபுறமும் போரினால் சிங்கள் படையினரின் வான் தாக்குதல், கனரக பீரங்கி தாக்குதல், துப்பாக்கி சூடுகள், கண்ணீவெடிகள் , வெடிப்பொருட்கள் ஆகியவற்றால் தமது கை, கால், கண் உட்பட பல உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்.
கருப்பையில் இருக்கும் சிசு, கற்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார், மாணவர்கள், முதியோர்கள், இளைஞர்கள், பெண்கள், ஏற்கனவே வலுவிழந்த நிலையில் இருந்தோர், ஏற்கனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது உடல் உறுப்புக்களை இழந்தவர்கள்,உணர்வுகளை இழந்தவர்கள், என அனைவரும் சிங்கள அரசின் கொடிய தாக்குதலிற்கு உள்ளாகினார்கள்.
வன்னியில் இருந்த கட்புல செவிப்புலன் அற்ற சிறார்கள் இல்லமான இனியவாழ்வு இல்லம், முதியோர் இல்லம், செயற்கை உறுப்புக்கள் பொருத்தப்பட்ட போராளிகள் கல்லூரி, களுத்து மற்றும் இடுப்பு பகுதிக்கு கீழ் இயங்காத போராளிகள் , மக்கள் விடுதிகள், வைத்திய சாலைகள், பராமரிப்பு இடங்கள் என்பன கிபிர் குண்டு தாக்குதல்களுக்கு உள்ளாகின. கந்தெரியாத போராளிகள் பொதுமக்கள் ஆகியோரும் தமது இருந்த சில உறுப்புக்களை மீண்டும் இழந்தனர்.
இன்று உலகம் வலுவிழந்தோர்களை வலுவிழந்தோர்கள் என்றே அழைக்க கூடாது என கூறுகின்றது அவ்வாறு கூறினால் உள ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என கூறிய உலகம் அவர்களை மாற்று வலுவு|ள்ளோர்கள் என அழைத்தது. ஆனால் தாயகத்தில் உள்ள மக்கள் தமிழினம் என்பதற்காக இந்த மாற்று வலுவுள்ளோர்கள் என்பது பெயர் அளவில் மட்டுமே இன்னமும் இருக்கின்றது.
தடுப்பு முகாம்களில் இதுவரை 113 பேர் இரு கண்களை இழந்துள்ள மக்களும், 4600 பேர் கால்களை இழந்த நிலையிலும், 5000 இற்கு மேற்பட்டோர் செவிப்புலன்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் தடுப்பு முகாமில் சாதாரண மக்களுடன் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் களுத்து, இடுப்பு ஆகியவற்றுக்கு கீழ் இயங்க முடியாத 60 பேருக்கு மேற்பட்ட ஆண்கள் , பெண்களும் எதுவித உதவியும் இன்றி பல நாட்கள் பரிதவித்தனர். அதன்பின்னர் வைத்திய சாலைகளுக்கு அனுப்பபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் உணர்விழந்த பெண்கள், தமது மார்பகங்களை இழந்த பெண்கள் கூட எதுவித மறைப்பு வசதிகளும் இன்றி முகாம்களிலும் , மருத்துவ விடுதிகளிலும் இருந்து அவதிப்பட்டனர்.
இவ்வாறான சூழலில் இலங்கையிலும் மாற்றுவலுவுள்ளோர் தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மாற்று வலுவுள்ளோர்களுக்கு உண்மையாக அவர்களை சமூகத்தில் சம அந்தஸ்துக்கு கொண்டு வரவேண்டுமெனின் அவர்களிற்குரிய வசதிகளையும் உரிமைகளையும் சர்வதேச அமைப்புக்கள் செய்து தரப்படவேண்டும். அப்போது தான் இந்த தினம் இலங்கையில் சர்வதேச அமைப்புக்களால் கொண்டாடப்படுவது அர்த்தமானதாக அமையும்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















