அன்னத்தை தொட்ட கைகளினால் இனி....
சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம், தேர்தலில் குதிப்பு என்பனதிடீரென வந்த ஒன்று அல்ல நன்கு திட்டமி்ட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு செயற்பாடு இதற்கு அமெரிக்க மற்றும் மேற்கத்தைய மஹிந்த எதிர்ப்பு வாத நாடுகளின் பின்னணி என்று கூறப்படுகின்றது. முக்கியமாக சரத், மஹிந்த போட்டியென்பது மேற்குலகம் இந்தியா ஆகியவற்றுக்கு இடையிலேயான இராஜதந்திர போட்டியே ஆகும்.
இதில் இந்தியா மெல்லவும் முடியாமல் , விழுங்கவும் முடியாத நிலைஉஇல் உள்ளது. தமிழ் கட்சிகளை வைத்து ஓர் சிங்கள எதிர்ப்பு அரசியலை நடாத்திக்கொண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அதிக பட்ச தீர்வாக தமிழர்களுக்கு வழங்கி தமது தேவையினை பூர்த்தி செய்ய முனையும் இந்தியாவி|ற்கு பொன்சேகா ஒரு பூதமாக வெளிக்கிளம்பியுள்ளார். தற்போதய நிலையில் மஹிந்தவிற்கோ அல்லது சரத் பொன்சேகாவிற்கோ வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து தமது திட்டங்களை பாளாக்க விரும்பவில்லை.
அதே நேரம் வெளிப்படையாக தமிழர் தரப்பிற்கும் யாரிற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என இந்தியா இதுவரை சொல்லவில்லை என்பது தமிழ் கட்சிகளின் தகவல். ஆனால் தமிழர்களின் 15 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகள் இலங்கையின் அரசியல் தலைமையில் மாற்றத்தினை கொண்டுவருவதற்கு ஓர் நெம்பாக இருக்கின்றது என்பதும் உண்மை ஆகவே அடுத்து வரும் காலப்பகுதியில் இந்தியா எந்தவகையில் தமிழர்களை பயன்படுத்த போகின்றது என்பதில் தெளிவற்ற நிலையில் தான் தமிழ் கட்சிகள் இருக்கின்றன.
இது இவ்வாறு இருக்க சரத் பொன்சேகா அன்னம் பறவையின் சின்னத்தின் கீழ் லலித் அத்துலத் முதலியின் கட்சியான கட்சியான பிரஜா தந்திரவாதி பெரமுன என்ற கட்சியின் சார்பாக அன்னம் சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அரசியலுக்கு வந்த பின்னர் மீண்டும் இராணுவத்திற்கு செல்லும் நிலையில் இல்லை என்றும் அதே நேரம் நாட்டில் சர்வாதிகாரத்தினை ஒழித்து , ஜனனாயகத்தை நிலை நாட்டி, ஊழல்களை ஒழிப்பேன் எனவும் கூறியுள்ளார் பொன்சேகா.
துப்பாக்கியை வைத்து விட்டு அன்னத்தில் இப்போ பறக்க ஆரம்பித்துள்ளார் பொன்சேகா இனிமேல் மீண்டும் துப்பாக்கியை தூக்க மாட்டேன் என்பது போலவும். அன்ன பறவை போலவே தான் மிருதுவானவன், நல்லவன், மனித உரிமை வாதி என அனைத்து வழிகளிலும் திட்டமிட்டு பொன்சேகாவின் பயணங்கள் ஆரம்பமாகி உள்ளன. நேற்று முந்தினம் சட்டவாளர்கள் முன் உரையாற்றிய பின்னர் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி ஒன்றிற்கு ஊடகவியலாளர் லசந்தவினை நான் கொல்லவில்லை, சில தெருச்சண்டியர்கள் செய்திருக்கலாம் என கூறியுள்ளார். அதாவது ஊடகவியலாளர் லசந்த் கொலையில் இராணுவம் செய்யவில்லை தான் அதில் சம்பந்தப்படவும் இல்லை. தான் தெருவிற்கு வந்து தெரு சண்டியர்கள் போல் நடக்கவில்லை. சிலதெருச்சண்டியர்கள் இதனை செய்திருக்கலாம். இவ்வாறு கூறினார் பொன்சேகா.
லசந்தவுக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியபின்னர் ஊடகவியாலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கே இவ்வாறு பதில் அளித்தார் பொன்சேகா.மனித உரிமைகள் அமைப்புக்களின் கண்டனங்களில்ம் இருந்து தப்புவதற்காக லசந்தவிற்கு மாலை அணிவித்து பின்னர் மனித உரிமைகளையும் ஊடக சுதந்திரத்தையும் மதிப்பதாக கூறி மனித உரிமைகள் அமைப்புக்களின் வாயை இலகுவாக அடைக்க முற்படுகின்றார்.
இந்தியாவை திருப்தி படுத்துவதற்காக அவர்களை நல்ல பிள்ளைகளாக காட்டி பழியை தாம் சுமக்கும் அளவிற்கு இராஜபக்ஸ மீது அதிக வெறியேற்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று பொன்சேகா தனது உரையில் விடுதலைப்புலிகளுடனான போரின் போது இந்தியா போரை நிறுத்த சொன்னதாகவும் ஆனால் தம்மால் அதனை நிறுத்த முடியவில்லை என்றும் இந்தியாவை நல்ல பிள்ளையாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். தேர்தல் உச்ச கட்டம் நெருங்க பிரபாகரன் ஒரு சிறந்த வீரர் தனது கொள்கைக்காக இறுதி வரை போராடியவர் என்றும் சொல்வார் என்பதில் வியப்பில்லை.
ஆயுத கொள்வனவின் ஊழல்கள் பற்றி குறிப்பிடுகையில் அதற்கு பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பானவர்களைத்தான் விசாரிக்கவேண்டும் என கூறுவதன் ஊடாக ஊழல் குற்ற சாட்டுக்களில் இருந்து தப்பி அதனை அரசாங்கத்தின் மீது போட்டுவிட்டி தான் ஊழலை ஒழிப்பவன் என காட்ட முயல்கின்றார். ஆனால் சரத்பொன்சேகாவின் மகள்மாரின் பேரில் அவர் பதவி ஏற்ற கையுடனேயே இரு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கம்பனிகள் பதிவு செய்யப்பட்டது. இதே நேரம் கோத்தாவும் பதிவு செய்தார் இருவருக்கும் இடையே பிரச்சினை வரக்காரணமே எந்த கம்பனி ஊடாக கொள்வனவுகளை செய்வது என்பதே ஆகும். இதில் கோத்தா வெற்றி பெற்றார் என்பது உண்மை.
அதே நேரம் சரத் பொன்சேகா பதவியில் இருந்தபோது அனைத்து மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டுள்ளார், இனவாதம் பேசியுள்ளார், மேற்கத்தைய சமூகத்தை, ஐ. நா அமைப்புக்களை தூற்றியுள்ளார். தற்போது அன்ன பறவை மீது ஏறி அனைத்தையும் வெள்ளையாக்க முயற்சி செய்வதுடன் தான் இனி வெள்ளைதான் என அடித்து கூறுகின்றார். இவை அனைத்தையும் தமிழர்கள் நம்புவார்களா? நம்பி ஏமாறுவார்களா?
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















