தாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்

தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தாயக உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஒருமித்து கோஷங்களை எழுப்பினர்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பாக இளைஞர்களினால் வலியுறுத்தி கூறப்பட்டது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் வெளியிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் கழகங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுத்திருந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தான் தமிழக உணர்வுக்கு ஆதரவாக நாளை (வெள்ளிக்கிழமை) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று ஏ. ஆர். ரஹ்மான் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், ''தமிழகத்தின் உணர்வினை ஆதரிக்கும் விதமாக நான் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பல இளைஞர்கள், மாணவர்கள் , பெண்கள் போராடி வருகின்றனர்.

பல திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயரிப்பாளர்களும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தமிழக உணர்வுக்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்

மெரினாவில் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாக சென்னை காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியான தகவலையும் காவல்துறையினர் மறுத்துள்ளனர். சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரினாவில் திரண்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளித்த சென்னை காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். மெரினாவில் மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மீது நடவடிக்கை என வெளியான தகவல் வதந்தி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.

பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…